'தந்தை' ஸ்தானத்தில் இயங்கினேன்.. 'அழுகுரல்' என்னுள் இன்னும் ஒலிக்கிறது.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்குப் பின் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'தந்தை' ஸ்தானத்தில் இயங்கினேன்.. 'அழுகுரல்' என்னுள் இன்னும் ஒலிக்கிறது.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக சுஜித் மீட்பு பணியில் தீவிரம் காட்டி முனைப்புடன் செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயகுமார், சுஜித் மரணத்திற்கு கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்

அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என் மனம் வலிக்கிறது

எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி  உறக்கமின்றி

இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம்

இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை

கருவறை இருட்டு போல இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை

இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க காத்திருந்தேன்

இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்து கிடக்கிறது

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு

பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது

மனதை தேற்றி கொள்கிறேன்;ஏன் என்றால்

இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்

சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்

என்று கவிதை எழுதி கீழே சி.விஜயபாஸ்கர் என கையொப்பம் இட்டிருக்கிறார். இந்த கவிதை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.