“எங்கயும் இப்படி இல்லங்க.. தமிழ்நாட்டுலதான்!”.. முதல்வரின் ஸ்பாட் விசிட்! சேலத்தில் கொரோனா அப்டேட்ஸ் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்புப்பணிக்காக சேலத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர் இதுவரை கொரோனா தாக்கம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
தவிர, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என்றும் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியதோடு விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும் மாநகராட்சிக்கும் காவல்துறைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய முதல்வர், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி அரசியல் நடக்கிறது என்று பேசியதுடன் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் மக்களோடு துணை நிற்க வேண்டும் என்றும் அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.