'இது தீர்த்தம்'.. 'மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்து'.. சாய்பாபா வண்டியில் வந்து இளைஞர்கள் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் சாய்பாபா உருவச் சிலை கொண்ட வாகனத்தில் வந்த ஆந்திரா இளைஞர்கள் 5 பேர் வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட முயற்சித்ததாக, மூதாட்டி ஒருவரின் சமயோஜிதத்தால் போலீஸாரிடம் பிடித்து ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பழையூர் பகுதியில் காலை நேரத்தில் ஆட்டோ ஒன்றில் சாய்பாபாவின் உருவச் சிலையை வைத்துக்கொண்டு ஒரு வாகனத்தில் வந்த 5 இளைஞர்களும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கு கூடிய மக்களுக்கு விபூதி, குங்குமம் கொடுத்துள்ளனர்.
மக்களும் 5 ரூபாய், 10 ரூபாய் என்று காணிக்கை போட்டுள்ளனர். அப்போது 10 ரூபாயை காணிக்கையாக மூதாட்டி ஒருவர் போட்டுள்ளார். அவரை ஒரு இளைஞரும், மற்ற வீடுகளுக்கு மற்ற இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தவன் சாய்பாபா தீர்த்தம் கொடுப்பதாகச் சொல்லி, கையில் வைத்திருந்த குவளையில் இருந்து தண்ணீர் ஊற்றி தெளிக்க முயற்சித்துள்ளான்.
அப்போது சுதாரித்த மூதாட்டி, உடனே அவனை பிடித்து தள்ளிவிட, அவன் ஓடத் தொடங்கியுள்ளான். மூதாட்டியும் விடாமல் துரத்த, அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்தவர்களும் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். இவர்களை ஊர் பொதுமக்கள் வளைத்துப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த சாய்பாபா தீர்த்தம் மயக்க மருந்தாக இருக்கக் கூடும் என்றும் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
இப்படி, விதவிதமாக வந்து நம் கவனத்தை திசை திருப்பியும் திருட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள், ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.