‘குழந்தைய கிணத்துக்குள்ள இருந்து வெளிய எடுக்க...’ ‘தண்ணி மொத்தத்தையும் வெளிய எடுக்கணும்...’ அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நண்பர்களுடன் 75 அடி ஆழம் உள்ள குளத்தில் குளிக்க சென்ற 11 வயது குழந்தை நீரில் மூழ்கி இறந்த செய்தி நாங்குநேரி பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘குழந்தைய கிணத்துக்குள்ள இருந்து வெளிய எடுக்க...’ ‘தண்ணி மொத்தத்தையும் வெளிய எடுக்கணும்...’ அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

கூலித்தொழிலாளியான சுப்பிரமணியன் (40) மற்றும் அவரது மனைவி சேர்மகனி ஆகியோர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு  மகள் கிருபாரதி (13), மகன் சரவணன் (11) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இதில் ஒருவரான 6 ஆம் வகுப்பு படிக்கும் சரவணன் இன்று காலை நண்பர்களுடன் விளையாட வெளியே கிளம்பியுள்ளார். விளையாடி சோர்வடைந்த சரவணன் அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான வயற்காட்டு கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சரவணன் தனது கட்டுப்பாட்டை இழந்து நீரில் தத்தளித்துள்ளார். உடனே அவரோடு இருந்த நண்பர்கள் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்திலிருப்பவர்களை உதவிக்கு கூப்பிட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் 11 வயது நிரம்பிய சரவணன் பரிதாபமாக நீரில் மூழ்கினார்.

விபத்து குறித்த தகவல் நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதும், நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிட்டத்தட்ட 75 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 60 அடிக்கு மேல் தண்ணீர்  இருந்ததால் மீட்பு படை குழுவினரால் அடி ஆழத்திற்கு சென்று உடலை தேட முடியவில்லை.

இதனால் 5 மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை இறைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மேலும் கிணற்று தண்ணீரை முழுவதுமாக எடுத்த பிறகு தான் குழந்தையின் உடல் வெளியே எடுக்க முடியும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து,இந்த சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கடும் முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தையின் உடலை மீட்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். சரவணனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் குழந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் சோகத்தில் அழுது கொண்டிருக்கின்றனர். நாங்குநேரி பகுதி மக்கள் அனைவரும் இச்சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

CHILD