'தம்பி 'கிளாஸ் ரூம்'ல பண்ற வேலையா இது'... 'டென்ஷன் ஆன பேராசிரியை'... மாணவன் செய்த கோர செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாணவிகளிடம் விளையாடியதைக் கண்டித்ததால், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தம்பி 'கிளாஸ் ரூம்'ல பண்ற வேலையா இது'... 'டென்ஷன் ஆன பேராசிரியை'... மாணவன் செய்த கோர செயல்!

தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹனீபா. இவருடைய மகன் மீரா மைதீன். இவர் தஞ்சையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மாணவர் மீரா மைதீன் வகுப்பறையில் மாணவிகளிடம் தின்பண்டங்களைப் பிடுங்கித் தின்று கொண்டு ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த பேராசிரியை இது வகுப்பறை, இங்கு இப்படியா நடந்து கொள்வது என மாணவனைக் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி பயிற்சி வகுப்பு நடந்தபோது, மீரா மைதீனை தனியாக அமர வைத்துவிட்டு, பிற மாணவர்களுக்குப் பேராசிரியை பாடம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் மீரா மைதீன், என்னை ஏன் தனியாக அமர வைத்து இருக்கிறீர்கள் எனப் பேராசிரியையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதோடு துறைத் தலைவரிடமும் அழைத்துச் செல்லப்பட்ட மீரா மைதீனை, துறைத் தலைவர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சற்றும் எதிர்பாராத மாணவர் மீரா மைதீன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இடைவேளை நேரத்தில் கல்லூரியிலிருந்து நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று எலி பசை வாங்கி வந்து கல்லூரி மைதானத்தில் அமர்ந்து தின்று விட்டார்.

பின்னர் வீட்டிற்குச் சென்ற அவர், வி‌‌ஷம் தின்ற வி‌‌ஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. மறுநாள் அதிகாலை மீரா மைதீன் வாந்தி எடுத்ததைப் பார்த்த பெற்றோர், என்ன வி‌‌ஷயம் என்று விசாரித்துள்ளனர். அப்போது தான் வி‌‌ஷம் தின்ற தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குக் குணப்படுத்த முடியாததால் மீண்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.  அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் பேராசிரியை, துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், பேராசிரியை மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் மீது மாணவரைத் திட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

SUICIDEATTEMPT, COLLEGESTUDENT, THANJAVUR, PROFESSOR, SCOLDED