'மகாராஷ்டிரா' டூ 'தமிழகம்' ... 'ஏழு நாட்கள்' ... 'ஆயிரம் கிலோமீட்டர் நடை' ... தமிழக இளைஞர்களின் வேதனைப்பயணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டதையடுத்து வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், வேலை, பணம் எதுவும் இல்லாத காரணத்தால் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே செல்ல முடிவெடுத்தனர்.
குறிப்பாக டெல்லி மாநிலத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் சில பேர் மாரடைப்பு மூலம் மரணமடைந்த நிகழ்வும் உண்டு. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊரடங்கின் காரணமாக அங்கிருந்து நடந்தே சொந்த ஊர் வர தீர்மானித்தனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இரவு சோலாப்பூரிலிருந்து நடைப்பயணத்தை தொடங்கினர். இவர்களுக்கு சாலைகளில் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி டிரைவர்கள் உதவி செய்தனர். லாரிகள் இல்லாத போது தங்களது நடைப்பயணத்தை தொடர்ந்தனர். ஒருவழியாக ஏழு நாட்கள் கடுமையான பயணத்திற்கு பின் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தாண்டி திருச்சி வந்தடைந்தனர். இது குறித்து இளைஞர் ஒருவர் கூறுகையில், 'வரும் வழியில் கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழக மாநில எல்லைகளில் தீவிரமாக சோதனை செய்தனர். ஒரு வழியாக திருச்சி வந்தடைந்த பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் காரில் எங்களது சொந்த ஊர் வந்தடைந்தோம். இந்த ஏழு நாட்கள் நாங்கள் அனுபவித்த வலிகள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' என தெரிவித்தனர்.
தங்களைப் போல பிற மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்களை உடனடியாக தமிழக அரசு மீட்க வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.