‘வேலை செய்யும் 300 பேருமே தமிழர்கள் இல்லை’.. ட்ரெண்டாகும் '#தமிழகவேலைகள்தமிழருக்கே' ஹேஷ்டேக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்“தமிழக வேலைகள் தமிழருக்கே” என்கிற ஹேஷ்டேகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்த முழக்கம் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. திருச்சி பொன்மலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு, போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வேத் துறை பணிமனையில் 300 பணியாளர்களுமே இந்தி பேசும் வட இந்தியர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டதை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (மே 3, 2019) திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு “தமிழர்களுக்கே 90% வேலை வழங்க வேண்டும்”, “மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று” உள்ளிட்ட முழக்கங்களுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த போராட்டத்தில் படித்த இளைஞர்கள், ஆண்களும் பெண்களுமாக, தங்கள் கைக்குழந்தைகளுடன் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.
இதில் கூடுதலாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், நாம் தமிழர் கட்சி தஞ்சை பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா. சின்னதுரை, தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், மகளிர் ஆயம் தலைவர் ம. இலட்சுமி, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தை அடுத்து, மராட்டிய மாநிலத்தினர் சிலர், மராட்டிய மாநிலப் பணிகள் மராட்டியர்களுக்கே என்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திவேல்முருகன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils உள்ளிட்ட ஹேஷ்டேகுகளின் கீழ் தங்களது கருத்துக்களை பதிவிடுகின்றனர்.