'கடல் கடந்து வந்த காதலி'...'கந்தசாமிக்காக அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்'... சுவாரசிய காதல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த அமெரிக்க பெண்ணை, திருப்புத்தூர் இளைஞர் கரம்பிடித்துள்ள சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

'கடல் கடந்து வந்த காதலி'...'கந்தசாமிக்காக அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்'... சுவாரசிய காதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தட்டடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்குச் சென்ற கந்தசாமிக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அமெரிக்காவில் தனது பணியினை தொடர்ந்த அவருக்கு, அங்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த எலிசபெத் என்ற  இளம்பெண்ணுடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து மூன்று ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், திருப்புத்தூரில் உள்ள கந்தசாமியின் வீட்டிற்கு எலிசபெத் சில மாதங்களுக்கு முன் வந்தார். தமிழகம் வந்த எலிசபெத்திற்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்து போக, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனிடையே தனது விருப்பம் குறித்து எலிசபெத் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க, அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதற்கிடையே கந்தசாமியை திருமணம் செய்வதற்காக எலிசபெத் என்ற தனது பெயரை அன்புக்கரசி என்று மாற்றிக் கொண்டார்.  இதனையடுத்து, அங்குள்ள சமுதாயக் கூடத்தில்  தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.  இதில் கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமணம் குறித்து அன்புக்கரசியாக மாறிய எலிசபெத் கூறுகையில், ''எனக்கு தமிழ்ப் பாரம்பரியம் மிகவும் பிடித்துள்ளது.   அதனை மிகவும் விரும்புகிறேன். அதனால் தமிழக முறைப்படி திருமணம் செய்ய இந்தியா வந்தேன். எனது கணவரின் உறவினர்கள் என்னிடம் மிகவும் அன்புடன் இருக்கிறார்கள். அவர்களை மிகவும் பிடித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் பெண் வீட்டார் சார்பில் விரைவில் நடைபெற உள்ளது.

WEDDING, BRIDE, ABROAD, TAMIL WEDDING, AMERICAN WOMAN