‘‘வேலை கிடைக்கல”... விரக்தி அடைந்த இளைஞர் செய்த காரியம்... அதிர்ந்த போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலை கிடைக்காத விரக்தியில் குடிப்பதற்காக ஏடிஎம் மிஷினை உடைத்து இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரியானுர் பகுதியில் கனரா வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. அப் பகுதியில் கல்லூரிகள் அதிகமாக இருப்பதால் வெளிமாநில மாணவ, மாணவிகள், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்று பாா்த்தபோது ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனா். அவர்கள் நடத்திய சோதனையில், ரூ. 11.11 லட்சம் பணம் அப்படியே இருந்தது. இதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார் கொள்ளை நடந்த இரவு யார் யார் ஏடிஎம்மை பயன்படுத்தினர் என்று தகவல்களை பெற்றனர்.
சிசிடிவி பதிவையும், ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தவர்கள் பட்டியலையும் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் திங்கள் கிழமை அதிகாலை முகத்தை மூடியபடி ஒருவர் ஏடிஎம் மையத்திற்கு வருவதும் பலமுறை பணம் எடுக்க முயற்சிப்பதும் பதிவாகியிருந்தது. பணம் எடுக்க முயன்றவர் ஒருகட்டத்தில் கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ஏடிஎம் மெஷினின் கீழ்பாகத்தை அடித்து உடைக்க முயன்றதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகளையும் பணம் எடுக்க முயன்ற கார்டின் விபரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர் விபரம் போலீசுக்கு கிடைத்தது. கொள்ளையடிக்க முயன்றவர் அரியனூர் பகுதியை அடுத்த உத்தமசோழபுரத்தை சேர்ந்த 24 வயதான கார்த்திக்ராஜ் என்பது தெரியவந்தது. கார்த்திக் வீட்டில் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பி.எஸ்.சி. படித்த அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் சும்மா ஊர் சுற்றி வந்த அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
அவ்வப்போது சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தில் குடி, சினிமா என வாழ்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஏடிஎம்மில் கொள்ளையடித்தால் லம்பாக செட்டில் ஆகலாம் என்று நினைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது தான் போலீசில் சிக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.