'நான் பேச மாட்டேன்'... 'இந்த துப்பாக்கி தான் பேசும்'.... 'வாட்ஸ்அப்'பில் மிரட்டல்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2-வது மனைவி குடும்பம் நடத்த வராததால், வாட்ஸ்அப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்-அப்பில் சில நாட்களாக, துப்பாக்கி வைத்துக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ உலா வந்தது. அந்த வீடியோவில் பேசும் நபர் துப்பாக்கியை காட்டி ''நான் பேச மாட்டேன். இந்த துப்பாக்கி தான் பேசும். நேரில் பார்த்தா, உடனே சுட்டுத்தள்ளிடுவேன். பொம்மை துப்பாக்கி என்று நினைத்தாயா?, பார்த்துக்கோ செத்திடுவே'' என்று அநாகரிகமான வார்த்தைகளை பேசி மிரட்டல் விடுக்கும் வகையின் அந்த வீடியோ அமைந்திருந்தது. அதற்கு அடுத்ததாக ஒரு பெண்ணும் அந்த வீடியோவில் பேசியிருந்ததால் அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதில் பேசிய பெண் ‘என்னுடைய பெயர் மலர். தற்போது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. எனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. மலேசியாவில் வேலை செய்தபோது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போதுதான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் கபாலீஸ்வரனை 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். எனவே அவருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து விட்டேன். ஆனால் கபாலீஸ்வரன் எனக்கும், எனது மகளுக்கும் பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக மிரட்டும் வீடியோவை அனுப்பி உள்ளார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றும்படி உதவிகேட்டு இதனை வெளியிடுகிறேன்’ என்று அந்த வீடியோ முடிகிறது.
இந்நிலையில் இந்த வீடியோ விவகாரம் காவல்துறையினரின் பார்வைக்கு சென்றது. இதுதொடர்பாக ஆய்வு செய்த காவல்துறையினர், துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுக்கும் நபர், வேலூர் பிஷப் டேவிட்நகரை சேர்ந்த கபாலி என்ற கபாலீஸ்வரன் என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்ய சென்றபோது, துப்பாக்கியை காட்டி காவல்துறையினரையும் மிரட்டியுள்ளார். இதையடுத்து லாவகமாக அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.
இதனிடையே கபாலியின் முதல் மனைவியின் மறைவுக்கு பின்பு, மலர் என்ற பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மலர், வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். இருந்தாலும் கபாலி அவ்வப்போது மலரை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக தான், துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடியோ எடுத்து மலரின் வாட்ஸ்-அப்பிற்கு கபாலி அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்துள்ள நிலையில், தான் செய்தது பெரிய தவறு என்னை மன்னித்து விடுங்கள் என கூறி, காவல் நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.