'ஒரு புகைய போட்டு விட்டா கொரோனா காலி' ... 'இல்லைன்னா கூட்டம் ஒண்ண போட்றலாம்' ... கொரோனாவுக்கு மருந்து சொல்லும் 'மத' மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மதத்தின் பெயரால் கொரோனாவை தடுக்கும் 'புது புது' வழிகளை சிலர் கையாண்டு வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் அடைப்பு, பொது இடங்களில் அதிகம் பேர் கூட வேண்டாம் எனவும் பொது மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசை விரட்ட மத போதகர்கள் சில பேர் பிரார்த்தனை நடத்தவுள்ளனர். அவர்களது அறிவிப்பில் 'கொரோனாவை தேசத்தை விட்டு விரட்ட பிரார்த்தனை செய்ய வாருங்கள்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதே போல புதுச்சேரி அருகே சில மத குருக்கள் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்ட ஹோமம் செய்யவுள்ளனர். ஹோமத்தில் ஏற்படும் புகையில் சிக்கி கொரோனா வைரஸ் அழிந்து போய் விடும் என்றும், சனி, செவ்வாய் சேர்ந்ததால் தான் கொரோனா வைரஸ் உருவானதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவை அனைத்திற்கும் முன்னோடியாக சில வாரங்களுக்கு முன்னதாகவே மத தலைமை போதகர் ஒருவர் நாம் பிரார்த்தனை செய்தால் மட்டுமே கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை காக்க இரவு பகலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அயராது உழைத்து வரும் நிலையில் மத நம்பிக்கை என்னும் பெயரில் மக்களை இன்னும் முட்டாளாக்க சிலர் வேடிக்கையான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.