“முரசொலி வெச்சிருந்தா திமுக-னுதான் சொல்லுவாங்க; ஆனா அறிவாளினு சொல்லணும்னா..”.. ரஜினியின் அனல்தெறிக்கும் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள கருத்துக்கள் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன.
உலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம் என்றும் கருத்துகளை நையாண்டி வடிவில் சொல்வதில் கைதேர்ந்தவர் சோ என்றும், பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி மற்றும் பக்தவச்சலத்தை எதிர்த்தவரான சோ போன்ற பத்திரிகையாளர், மிகவும் கெட்டுப்போன இந்த சமுதாயத்துக்குத் தேவை என்றும் முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் ரஜினிகாந்த் பேசினார். மேலும், ‘கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது’ என்றும் ரஜினி பேசிய பஞ்ச் பளீர் பேச்சு பலரையும் ஈர்த்துள்ளது.
தவிர, பத்திரிகைகளில் கலப்படம் இல்லாமல் எழுதவேண்டும் என்பதை ரஜினி ஒரு குட்டிக்கதையும் கூறினார். அதன்படி, ‘ஒரு பால் வியாபாரி கலப்படம் இல்லாத பாலை 10 ரூபாய்க்கு விற்று வந்தார். ஊரில் நல்லவர்கள் இருந்தால் பிடிக்காது அல்லவா? இன்னொரு பால் வியாபாரி பாலில் தண்ணீர் கலந்து 8 ரூபாய்க்கு விற்றார். அந்த ஏமாற்றுக்காரருக்கும் ஏமாற்றாக இன்னொருவர் 6 ரூபாய்க்கு பாலில் தண்ணீர் கலந்து விற்றார். லிட்டர் 10 ரூபாய்க்கு விற்ற பால் வியாபாரியின் தொழில் நலிவடைந்தும், அவர் தன் விலையையோ பாலின் தரத்தையோ குறைக்கவில்லை.பின்னர் ஊரில் விழாக்காலம் வந்தது. அப்போது பாலுக்கு தேவை ஏற்பட்டதால், மூவரிடமும் மக்கள் பால் வாங்கினர். ஆனால் கலப்படம் இல்லாத பாலில் செய்த பலகாரங்கள் மட்டுமே சுவையாக இருந்தன. அவை நல்ல வரவேற்பை பெற்றன. எனவே பத்திரிகையில் உண்மையை எழுதுங்கள். கலப்படம் இல்லாமல் எழுதுங்கள்’ என்று கூறினார்.