வரவேற்பு.. மொழிபெயர்ப்பு.. பாதுகாப்பு.. பிரதமர் 'மோடி-சீன' அதிபரைக் கவர்ந்த.. 3 தமிழர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து விட்டாராம்.
கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்து உரையாடினர். சீன அதிபருக்கு மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டிய மோடி, அவருக்கு சிறப்பான விருந்தினையும் அளித்து மகிழ்ந்தார்.
இந்தநிலையில் சீன அதிபருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டு நெகிழ்ந்த மோடி அதற்கு உறுதுணையாக இருந்த மூன்று தமிழர்களை நேரடியாக பாராட்டி இருக்கிறார். குறிப்பாக விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஜின்பிங்கை மிகவும் கவர, இதனை மோடியிடம் சொல்லி மகிழ்ந்துள்ளார். இதனால் நெகிழ்ந்த மோடி இதற்கு காரணமான கவிதா ராமு ஐ.ஏ.எஸ்ஸிடம் தனது பாராட்டுகளை தெரிவிக்க சொல்லி வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.
தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது தனக்கும், ஜின்பிங்க்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக இருந்த மதுசூதனனையும் மோடி பாராட்டி இருக்கிறார். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் பயின்ற மதுசூதனன் மாண்டரின் மொழியில் மோடி பேசியதை ஜின்பிங்க்கு மொழிபெயர்த்து சொல்லி இருக்கிறார். இதுதவிர 2 நாட்களும் மோடிக்கு இரவு -பகலாக பாதுகாப்பு அளித்த திருவள்ளூர் மாவட்ட அதிகாரி அரவிந்தனையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
பிரதமர் தங்கியிருந்த மாமல்லபுரம் 'பிஷ்ஷர் மேன் கவ்' நட்சத்திர விடுதி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான அரவிந்தன் ஐ.பி.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் தான் இரண்டு நாள்களும் இருந்தது.தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் கிளம்பும்போது, அரவிந்தனை அழைத்து 'இரண்டு நாள்களும் தூங்காமல் பாதுகாப்பு அளித்தீர்கள். விஷ் யூ குட் சக்சஸ்' எனப் பாராட்டினாராம். தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று அதிகாரிகள் பிரதமரிடம் பாராட்டு பெற்றது தமிழக அதிகாரிகள் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.