கமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

கமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு!

நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் இன்று தேர்தல் நிகழும் நிலையில், 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில், எந்திரக் கோளாறுகள் காரணமாகவும், வேறு சூழ்நிலைகள் காரணமாகவும், வாக்குப்பதிவு தொடங்குவதில் இழுபறி நீடித்தது. பின்னர் அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. சென்னை ஆதம்பாக்கம் இந்திராகாந்தி பள்ளி வாக்குச் சாவடி இயந்திரம் பழுதானதால் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை பணகுடியில் உள்ள 31வது வாக்குசாவடியில் 31 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரம் கோளாறு அடைந்ததால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் தவித்தனர். மதுரை உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியதால் அங்கு சலசலப்பு எழுந்தது. இதேபோல் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு இயந்திரம், கமல்ஹாசன் வாக்களிக்கும் முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டை வாக்கு மையத்தில் இருந்த வாக்கு இயந்திரம்

ராமநாதபுரம் பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சிப் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம், திருவள்ளூர் பெரியபாளையம் அருகே உள்ள அண்ணாவரம் கிராமத்தின் வாக்குப்பதிவு இயந்திரம், சேலத்தில் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 217-ன் வாக்குப்பதிவு இயந்திரம், கோவை ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம்,
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம், தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாக்களிக்கவிருந்த பெரியகுளம் வாக்குச்சாவடியின் வாக்கு இயந்திரம் எல்லாம் பழதாகியதால், வாக்குப்பதிவு தாமதமாகவே தொடங்கப்பட்டது.

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவே தொடங்கவே வெகு நேரம் ஆகிக்கொண்டிருந்த சூழல் உருவானது. இன்னும் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்னும் சரிசெய்யப்படாததால் வாக்குப்பதிவு தொடங்கப்படாத சூழல் உருவாகியுள்ளது.