'வா.. வா.. எங்க ஓடுற.. கேட்டுக்குள்ள வா'.. ஹெல்மெட் போடாதவங்களுக்கு ‘இன்பச் சுற்றுலா’ .. காவல்துறையின் நூதன முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகளைப் பிடித்து, அம்மாவட்ட காவல் துறையினர் நூதன முறையில் தண்டித்துள்ளது பிரபலமாகி வருகிறது.
ஒருவரின் குற்றத்தை தண்டிப்பதை விடவும், அந்த குற்றத்தினால் விளையும் தீமைகளை அவருக்கு உளமாற புரிய வைப்பது என்பது அதை விட முக்கியமாகிறது. அந்த வகையில், தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் வந்த 70க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை பிடித்த போலீஸார், அவர்களை இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
ஆம், ஹெல்மெட் அணியாமல் காவல் துறையிடம் சிக்கி, நீதிமன்றம் சென்றால் விசாரணைகள் எவ்வாறு நடக்கும் என்பதற்கு ஒரு டெமோ காட்டும் வகையில், பிடிபட்ட ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போலீஸார் அவர்களிடம் இருந்து விபரங்களை வாங்கி எழுதிக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்களை தர்மபுரி நகர் பகுதியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுற்றுக் காண்பித்துள்ளனர். மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களை சுற்றிக் காட்டியுள்ளனர்.
இதுபுறம் என்றால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மோட்டார் சட்டத் திருத்த மசோதாவினால், இனி ஹெல்மெட் அணியாதவர்களுக்கான அபராதம் 100லிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படவிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.