'சின்ன வயசுல இருந்தே'... 'ரொம்ப ஆச பட்டா சார்'.. 'ஆனா இந்த முடிவ எடுப்பான்னு நினைக்கல!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெரம்பலூர் அருகே மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சின்ன வயசுல இருந்தே'... 'ரொம்ப ஆச பட்டா சார்'.. 'ஆனா இந்த முடிவ எடுப்பான்னு நினைக்கல!

பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு வினோத்குமார் (வயது 23) என்கிற மகனும், கீர்த்தனா(19) என்கிற மகளும் உள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கீர்த்தனாவிற்கு சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததால், நீட் தேர்வுக்காக சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற கீர்த்தனா, 202 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் அவரால் மருத்துவ படிப்புக்கு செல்லமுடியவில்லை. இருப்பினும் மனம் தளராமல் கடந்த மே மாதம் நடந்த ‘நீட்‘ தேர்வில் பங்கேற்ற அவர், 384 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ் கலந்தாய்விற்கு கீர்த்தனா அழைக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், பி.டி.எஸ். கலந்தாய்விற்கு அழைக்கப்படலாம் என நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் அதற்கும் அழைக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு மாத காலமாக கீர்த்தனா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

தேர்வில் தோல்வி அல்லது வாழ்க்கையில் விரக்தி என்பது நமது வாழ்க்கையின் முடிவு அல்ல. இறுதி வரை போராடுபவன் தான் மனிதன். எனவே எந்த சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணத்திற்கு யாரும் செல்ல வேண்டாம். அவ்வாறு மிகுந்த மன உளைச்சலில் அதுபோன்ற எண்ணங்கள் தோன்றினால் 'Medical Helpline 104', 'Sneha - 044- 24640050' இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அவர்கள் நிச்சயம் தற்கொலை எண்ணங்களிலிருந்து வெளிவர உதவி செய்வார்கள்.

NEET, SUICIDEATTEMPT, STUDENTS, SCHOOLSTUDENT, KEERTHANA, PERAMBALUR