'மூச்சுக் குழாய்க்குள் போன திருகாணி'... 'திக் திக் நிமிடங்கள்'... மாஸ் காட்டிய அரசு மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூச்சுக்குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தியின் திருகாணியை அறுவை சிகிச்சை செய்யாமல் அகற்றி, அரசு மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்பம். 55 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதமாக கடும் வறட்டு இருமல் இருந்துள்ளது. அதோடு இருமும் போது ரத்தம் வர தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அங்கு அவரை சோதனை செய்ததில் மூக்குத்தியின் திருகாணி ஒன்று நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழலில் சென்று அடைத்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி இருக்கிறார். மூக்குத்தி கழன்று கீழே விழாததாலும், திருகாணி நுரையீரலில் அடிப்பகுதிக்கு சென்ற போதும் அதுகுறித்து தெரியாமல் புஸ்பம் இருந்துள்ளார்.
இதனிடையே அவரை தேற்றிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யாமல் அகநோக்கி மூலம் திருகாணியை அரசு மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளார்கள். தனியார் மருத்துவமனையில் ஒன்றரை லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சையை, அரசு மருத்துவர்கள் முற்றிலும் இலவசமாக செய்து அசத்தியுள்ளார்கள்.
மருத்துவர்களின் சாதுர்யமான சிகிச்சையால் புஷ்பா தற்போது முழு நலம் பெற்றிருப்பதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகிறார். மேலும் நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே புஷ்பாவை மீட்டு மறுவாழ்வு கொடுத்த புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளன.