'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார்'.. 'கொல்கத்தா சென்று வந்த சென்னை பெண்மணி'.. கொரோனாவுக்கு பலியான இருவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் கொரோனாவால் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 250 பக்தர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணியாற்றி வந்த பட்டரின் தயாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவு உயிரிழந்ததை அடுத்து மூதாட்டியின் உடல், உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப் பட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
இறந்த மூதாட்டியின் மகன் கோயில் பட்டர் என்பதால் அவருடன் பணியாற்றும் சக பட்டர்கள் உட்பட மொத்தம் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் கீழ்ப்பாக்கதைச் சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது உறவினர் கொல்கத்தாவில் இருப்பதால் அவர்களை கொல்கத்தா சென்று பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்தவுடன், இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிக காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இறந்துபோன அந்தப் பெண்ணின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.