‘தனிப்படை’ அமைத்து வீட்டுக்கே சென்று உதவி.. மதுரை காவல்துறையின் அசத்தல் ஐடியா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கில் பசியால் வாடும் மக்களுக்கு மதுரையில் காவல்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

‘தனிப்படை’ அமைத்து வீட்டுக்கே சென்று உதவி.. மதுரை காவல்துறையின் அசத்தல் ஐடியா..!

ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் ஏராளமான சாமானிய மக்கள் பசியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல தனியார் அமைப்புகளும் உதவி வருகின்றன. ஆனாலும் சிலர் உணவில்லாமல் பசியால் வாடும் நிலை தொடர்ந்து வருகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மிக நலிவடைந்த மக்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த காவல்நிலையங்களின் சார்பில் மளிகை மற்றும் காய்கறிகள் வழங்க தனிப்படை அமைக்கப்பட்டு அதற்கான பணி நடந்து வருகிறது. தனிப்படை தரும் தகவலின் அடிப்படையில் காவல்நிலையத்தின் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் உதவி பெற முடியாதவர்கள் இந்த முறையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு ஒவ்வொரு காவல்நிலையத்தின் சார்பில் தலா 80 பேருக்கு இந்த உதவிகள் செய்யப்பட்டு வருவதாக மதுரை சுப்ரமணியபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா தெரிவித்துள்ளார்.