'கையில் குழந்தைகளும், உடைமைகளுமாய்'... வீதியெங்கும் 'கணவனைத்' தேடி அலைந்த ...பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை அருகே கைகளில் இரண்டு குழந்தைகளுடன் தனது கணவரைத் தேடி அலைந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'கையில் குழந்தைகளும், உடைமைகளுமாய்'... வீதியெங்கும் 'கணவனைத்' தேடி அலைந்த ...பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா என்பவர் திருப்பூரிலுள்ள மாவு மில் ஒன்றில் வேலை பார்த்த போது அங்கு அவருடன் வேலை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முன்னதாக திருமணமான சில மாதங்களிலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

போலீஸில் புகாரளித்து கணவர் சுரேஷுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்துள்ளார் பபிதா. இருப்பினும் குழந்தை பிறந்த பிறகும் கூட கணவர் தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும், கணவரை மீண்டும் கண்டுபிடித்து தருமாறும் காவல் நிலையத்திற்கு பல முறை ஏறி இறங்கியுள்ளார். இறுதியில் சுரேஷை கைது செய்த போலீஸார், சில மாதங்களுக்கு முன் இருவரை இணைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனியே தவிக்க விட்டு சென்றுள்ளார்.

முந்தானையில் குழந்தைகளை முடிந்து வைத்து கொண்டு, கையில் உடைமைகளுடன் மதுரையின் பல பகுதிகளில் தனது கணவரைத் தேடி அலைந்துள்ளார் பபிதா. மதுரை பனகல் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது பசி மயக்கத்தில் மயங்கி விழுந்துள்ளார் பபிதா. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறிய படி ஓடி வந்து பபிதா மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவை வாங்கி கொடுத்தனர்.

பபிதாவின் நிலையை அறிந்தவர்கள் மிகவும் வருந்தினர். பபிதாவிற்கு விரைவில் நீதி கிடைக்க அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

MADURAI, TAMILNADU