இளைஞரின் விபரீத செயல்.. குளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சிமாவட்டம் மணப்பாறையில் இருந்து அன்னவாசல் வழியாகப் புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் தாவூதுமில்லைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். பேருந்து அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்னும் இடத்தில் சென்றபோது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது.
லாரியின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், அந்த லாரியை முந்த முயன்றுள்ளார். இதைப்பார்த்த அரசுப் பேருந்து ஓட்டுநர், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க. பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக பேருந்துமீது, இருசக்கர வாகனம் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த இளைஞர் பெருஞ்சனையைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் 24 வயதான மதியழகன் என்பது தெரியவந்தது. பேருந்து குளத்துக்குள் கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும், போலீஸார் வருவதற்குள் தாமதிக்காத பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் போலீஸார் விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.