'1 கி.மீ-க்கு பின்னோக்கி இயக்கப்பட்ட ரயில்’.. டிரைவரின் அசாத்திய செயலுக்கு காரணம் இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தவரை காப்பாற்ற ரயிலை ஒரு கிலோ மீட்டர் பின்னோக்கி இயக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (26/04/2019) மத்தியப் பிரதேசத்தின் பினாவில் இருந்து ராஜஸ்தானின் கோட்டாவுக்குச் செல்ல கோட்டா-பினா விரைவு ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் ராஜஸ்தானின் சல்புரா ரயில் நிலையத்தைக் கடந்த பிறகு அதில் பயணம் செய்த ராஜேந்திர வர்மா என்ற நபர் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற சுரேஷ் வர்மா என்ற உறவினரும் தவறி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
இந்நிலையில், அருகில் இருந்த சக பயணிகள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து கீழே விழுந்த இருவருடன் பயணம் செய்த மற்றொரு உறவினர் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ரயில் நின்ற காரணத்தினால் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றமுடியவில்லை.
இந்நிலையில், இந்த தகவல் உடனடியாக ரயில் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்களை மீண்டும் ரயிலில் ஏற்றிக்கொண்டு ரயிலை டிரைவர் ஒரு கிலோ மீட்டர் வரை பின்னோக்கி இயக்கியுள்ளார். பின்னர் சரியான இடம் வந்தவுடன் ரயிலை நிறுத்தி காயமடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய சுரேஷ் வர்மா, “நானும், ராஜேந்திராவும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாண்டா மாவட்டத்தில் ஒன்றாக வேலை செய்து வருகிறோம். கடந்த சில நாள்களாக ராஜேந்திரன் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தான். இதன் காரணமாகவே நாங்கள் ராஜஸ்தான் செல்ல முடிவு செய்து ரயிலில் சென்றோம். இந்நிலையில், அதிக மன உலைச்சலினால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரா திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.