'உங்கள நம்பித்தானே வர்றோம்'... 'நீங்களே இப்டி பண்ணலாமா?’... ‘டிரைவரின் செயலால் அதிர்ந்த பயணிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையில் செல்ஃபோனை பார்த்துக்கொண்டே, அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வெளியானதையடுத்து, அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர் மூக்கையா. இவர் கடந்த வெள்ளிக்கிழைமையன்று, புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பேருந்தை ஓட்டிச்சென்றார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் அவர், ஆலங்குடியை தாண்டியதும் செல்ஃபோனில் வாட்ஸ் ஆப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியதாகத் தெரிகிறது. ஆலங்குடியில் செல்ஃபோனை பார்க்கத் துவங்கிய ஓட்டுநர், அவசரத்துக்கு ஃபோனை உபயோகப்படுத்துகிறார் என நினைத்துப் பயணிகள் பயத்தோடு அமர்ந்திருந்தினர்.
ஆனால் அவர், ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் செல்ஃபோனில் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து கொண்டே, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் வரை, சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக, செல்ஃபோனை பயன்படுத்தியபடியே இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில், ஓட்டுநரின் அருகே இருந்த பயணி ஒருவர், இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
வைரலான இந்த வீடியோவை பார்த்த மக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் மூக்கையாவை, ஒரு மாதத்திற்கு பணி இடைநீக்கம் செய்து, புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக மேலாளர் ஆறுமுகம் உத்தரவிட்டார். இதுபோன்று செயலில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, அரசு போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.