‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில் ஏற்படுத்திய விபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..

கேரள மாநில அமைச்சரவையில் சர்வே இயக்குநராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமன் (33). இவர் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் தோழி ஒருவருடன் மது அருந்திவிட்டு சொகுசு கார் ஒன்றில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது மியூஸியம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது அவருடைய கார் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றபோதிலும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த அந்த இளைஞரின் பெயர் பஷீர் (35) என்பதும், அவர் சிராஜ் எனும் மலையாள நாளேட்டின் தலைமை செய்தியாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராமிடம் விசாரணை நடத்தியபோது, தன்னுடைய தோழி தான் காரை ஓட்டி வந்தார் என அவர் கூறியுள்ளார். பின்னர் அவருடைய தோழியிடம் போலீஸார் விசாரித்ததில் ஸ்ரீராம் தான் காரை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஸ்ரீராம் குடித்திருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பேசியுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே.சசீதரன், “ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். விதிகளையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய அதிகாரியின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.

KERALA, IAS, OFFICER, JOURNALIST, DRUNKEN, DRIVING, SHOCKING, ACCIDENT