'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் வீடுகளை விட்டு வெளியே வருவது, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் முதல் உயிர் பலி நிகழ்ந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. அதை அவர்கள் உணர்ந்தது போல தெரியவில்லை. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலை பின்பற்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருவோரின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இது வேண்டுகோள் அல்ல, கடுமையான எச்சரிக்கை. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.