'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மாநிலம் மாஹேவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாஹே பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் அபுதாபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 3 நாட்களுக்கு கோழிக்கோடு விமானம் நிலையம் மூலமாக மாஹேவுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் அவர் மாஹே அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். பின்பு அவரது ரத்த மாதிரிகள், கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையில் அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து மாஹே அரசு மருத்துவமனையில் அந்த மூதாட்டி தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி வசித்து வந்த பகுதியில் வேறு யாருக்காவது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதியில் மருத்துவக் குழுக்களும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபர் இந்த மூதாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், மால், உடற்பயிற்சிக் கூடங்கள், சண்டே மார்க்கெட் போன்றவற்றையும் வரும் 31-ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டநிலையில், மதுபானக்கடைகளை மூடுவது குறித்து ஆலோசித்து இன்னும் 2 நாள்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.