'சொல்லி ஒரு நாள் கூட ஆகல' ... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே' ... சர்ச்சையை உருவாக்கிய ஜல்லிக்கட்டு போட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஒரே இடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க வேண்டி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூட உத்தரவிட்டிருந்தது. அதே போல பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாடு விதித்த ஒரு நாளிலேயே பத்தாயிரம் கூடியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள் மட்டும் சானிட்டைசர் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். மற்றபடி போட்டியைக் காண வந்த மக்களுக்கு எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை.
அரசு நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் வரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கூடியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.