‘பஸ்ல இருந்து இறக்கி விடுங்க, எனக்கு கொரோனா வைரஸ் இருக்கு...’ ‘பயமா இருக்கு, எங்களுக்கும் செக் பண்ணுங்க...’ பேருந்தில் பீதியை உண்டாக்கிய பெண்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சொல்லி பேருந்திலிருந்து பாதியில் இறங்கி பயணிகள் அனைவரையும் பீதி அடைய செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவிலிருந்து உலகநாடுகளுக்கு பரவி வருகிறது கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ். இதுவரை இவ்வைரஸ் தோற்று மூலம் சுமார் 5122 இறந்துள்ளனர், மேலும் 1,39,668 பேருக்கு இந்த நோய் தோற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவதை விட அதை பற்றிய வதந்திகள் பரவுவதால் பெரும்பாலான மக்கள் ஒரு வித பயத்துடனே பொது வெளியில் சுற்றிவருகின்றன. அவர்களை மேலும் திகிலடைய செய்துள்ளார் ஒரு இளம்பெண்.
மேல்மருவத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி இளம் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். பேருந்து செல்லும் போது திடீரென எழுந்த அந்த பெண்மணி தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது, உடனே என்னை இந்த பேருந்தில் இருந்து இறக்கி விடுங்கள் என்று சத்தமிட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பேருந்தின் நடத்துனர் உடனடியாக விசிலடித்து வண்டியை நிறுத்தியுள்ளார்.
மேலும் பேருந்தில் இருந்து வேகமாக இறங்கிய அந்த இளம்பெண் பேருந்துக்கு பின்னால் நின்று கொண்டிருந்த காரில் ஏறி சென்றுவிட்டார். இதனை கண்டு பீதி அடைந்த சக பயணிகள் பேருந்தை மருத்துவமனைக்கு திருப்பி தங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யுமாறு நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
என்ன செய்வதென்று அறியாத நடத்துனரும், ஓட்டுனரும் போலீசாரை வரவழைத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அந்த இளம் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். செல்போனில் பேசிய அந்த பெண் தன் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாட செல்ல வேண்டும் என்பதற்கு தான் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியதாக சொல்லியுள்ளார். அதன் பிறகு போலீசார் சக பயணிகளுடன் நடந்ததை கூறிய பின் பயணிகள் அனைவரும் நிம்மதியுடன் பேருந்தில் ஏறி சென்றனர்.