'சென்னை பெண்ணுக்கு வந்த காய்ச்சல்'... 'அலெர்ட்டான மருத்துவர்கள்'... ரெடியான 'ஸ்பெஷல் வார்டு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். அவர் விமான நிலையம் வந்ததும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்த நிலையில், வீட்டிற்கு சென்ற அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதனால் பதறிப்போன அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீனா வழியாக வந்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொடர்பாக தனி வார்டு ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த பெண்ணுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த எந்த அறிகுறியும் இல்லை என தெரியவந்தது. மேலும் அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என, மருத்துவமனை டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியுள்ளார்.