'கையில காசு இல்ல, சாப்பிட வழி இல்ல'...'ஊருக்கு நடந்தே போறோம் சார்'...'மூட்டை முடிச்சுகளுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்'... சென்னையில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கையில் காசு இல்லாத நிலையில், இதற்கு மேலும் சென்னையில் இருக்க முடியாது என்ற நிலையில், 350-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

'கையில காசு இல்ல, சாப்பிட வழி இல்ல'...'ஊருக்கு நடந்தே போறோம் சார்'...'மூட்டை முடிச்சுகளுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்'... சென்னையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அது பலரின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. பிழைப்புக்காகத் தமிழகம் வந்த பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள், தற்போது வேலையிழந்து நிற்பதால், அவர்களின் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மீஞ்சூரை அடுத்த அத்திட்டு புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று காலை சொந்த ஊர் செல்வதற்காக, சென்னை சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி தண்டவாளம் வழியாகவே மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, மூன்று லாரிகள் மூலம் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

அதேபோன்று கிண்டியில் தங்கியிருந்த  60-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் கிண்டியிலிருந்து நடந்தே, பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலம் வரை வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் கையில் காசு இல்லை எனவும், சாப்பிட வழி இல்லை, அதனால் ஊருக்கு நடந்தே போவதாகக் கூறினார்கள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், அவர்களுக்கு உடனடியாக சாப்பாடு பொட்டலங்களை வழங்கினார்கள்.

இதையடுத்து உங்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீசார், அனைவரையும் போலீஸ் வாகனங்கள் மூலம் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.