‘சிக்னல் கிடைக்காததால்’... ‘வீட்டுக்கு வெளியே வந்து செல்ஃபோன் பேசிய இளைஞர்’... ‘சென்னையில் நடந்த கோரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மயிலாப்பூரில் 18 வயது இளைஞர் கத்தியால் 8 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (18). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். வீட்டிலிருந்த வசந்துக்கு செல்ஃபோனில் அழைப்பு வந்தது. அப்போது வீட்டுக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை என்பதால் அவர் பேசியபடி தெருவுக்கு வந்திருக்கிறார்.
தெருவில் நின்றபடி வசந்த், செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 4 பேர் வசந்தை சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். திடீரென நடந்த தாக்குதலில் வசந்த் கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பொதுமக்களைப் பார்த்ததும் பைக்கில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வசந்தை மீட்ட அப்பகுதி மக்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே வசந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வசந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வசந்த் கொலை குறித்து நடத்திய விசாரணையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அதனால் சரத்திடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.