'சென்னையில் 300-ஐ தாண்டிய 3 பகுதிகள்'... 'கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 357 ஆக உயர்வு'... 'ஆண்கள், பெண்கள் பாதிப்பு விபரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில நாட்களாக தினமும் சென்னையில் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், சென்னையில் மொத்த பாதிப்பு 2,008 ஆக உயர்ந்துள்ளது.

'சென்னையில் 300-ஐ தாண்டிய 3 பகுதிகள்'... 'கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 357 ஆக உயர்வு'... 'ஆண்கள், பெண்கள் பாதிப்பு விபரம்'!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து இருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து தொற்று  பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, ஒலி ஒளி மூலம் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது. இருந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, திரு.வி.க.நகரில் 395 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 327 பேருக்கும், ராயபுரத்தில் 321 பேருக்கும், தேனாம்பேட்டை 230 பேருக்கும், அண்ணா நகரில் 169 பேருக்கும், தண்டையார் பேட்டையில் 149 பேருக்கும் வளசரவாக்கத்தில் 146 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒருசில வாரங்கள் வரை ஒரு கொரோனா நோயாளி கூட, இல்லாத அம்பத்தூர் மண்டலத்தில் இன்று 98 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 61.98 சதவீதமும், பெண்கள் 37.92 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 5 நாட்களில் 233-ல் இருந்து 357 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டால், அந்தப் பகுதி முழுவதும், தடுப்புகள் கொண்டு போடப்பட்டு, வெளியாட்கள் உள்ளே வரவும், உள்ளே இருப்பவர்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டு தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவிக நகரில் 70 இடங்களும், ராயபுரம் மண்டலத்தில் 80 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.