'திருமண நிகழ்ச்சிக்கு போனபோது நேர்ந்த சோகம்'... 'லாரி மீது கார் மோதி 3 பேர் பலி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, கார் மோதிய கோர விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

'திருமண நிகழ்ச்சிக்கு போனபோது நேர்ந்த சோகம்'... 'லாரி மீது கார் மோதி 3 பேர் பலி'!

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்த 6 பேர், கோவில்பட்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டனர். காரை சுகன் என்ற பெண் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. காரின் முன் பக்க இருக்கையில் ஒருவர் அமர்ந்து கொள்ள, பின் பக்க இருக்கையில் 4 பேர் அமர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. காலை ஆறரை மணி அளவில், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் ஏற்றிய லாரி ஒன்று சாலை ஓரம் நின்றிருந்தது.

அந்த லாரியை, காரை ஓட்டி வந்த பெண்ணான சுகன் அருகில் வந்த பிறகே, கவனித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பதற்றம் அடையவே, சில நொடிகளில் லாரியின் பின் பக்கம் கார் மோதி சிதைந்தது. மோதிய வேகத்தில் காரின் பின்பக்கத்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமுற்று எட்டயபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டெய்னர் ஏற்றிய லாரியின் ஓட்டுநர் உறங்குவதற்காக, அந்த இடத்தில் லாரியை நிறுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில் சுகன் என்ற பெண் தற்போது தான் கார் ஓட்டிப் பழகுவதாகவும், பயிற்சி பெறும் ஓட்டுநரான அவர் பதற்றம் அடைந்ததால் லாரி மீது மோதி இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ACCIDENT, THOOTHUKUDI