‘எதிரே வந்த அரசுப் பேருந்து’... ‘நேருக்கு நேர் மோதிய கண்டெய்னர் லாரி’... ‘தீப்பிடித்து எரிந்து கோர விபத்து’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து சேலம் நோக்கி பயணிகளுடன் கிளம்பிய அரசு விரைவு பேருந்து, சங்ககிரி அருகே மங்கரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று மாலை வந்து கொண்டிருந்தது. அப்போது கோவை நோக்கி எதிரே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பையும் தாண்டிச் சென்று, எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் லாரியில் தீப்பற்றிய நிலையில் அதன் முன்பகுதி முற்றிலும் தீயில் கருகியது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநரும், பேருந்தில் பயணித்த நவீன் குமார் என்ற இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீப்பிடித்து எரிந்த லாரியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை மீட்ட போலீசார் குமாரபாளையம் மற்றும் சங்ககிரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு காயமடைந்த பயணிகள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுள் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.