'ஜீவனாம்சமா கேட்குற?'... ‘பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'நண்பருடன் சேர்ந்து, கணவர் செய்த காரியம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்று வந்த முதல் மனைவியை தனியாக வரவழைத்து, கணவரே எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தீகுண்டு பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று இருட்டு நேரத்தில் தீவைத்து எரிக்கும் காட்சி தொலை தூரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொலை நடந்த நேரத்தில், அந்த பகுதிக்கு சென்ற கார் ஒன்றை, காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
அதன்பின்னர் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து, கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நேனனங்கலா பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. லோகேஷ், தனது மனைவி கவுரம்மாவுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கவுரம்மாவிற்கு குறிப்பிட்ட அளவு ஜீவனாம்ச தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்த நிலையில், திடீரென ஜீவனாம்சம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் லோகேஷ். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜீவனாம்சம் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர் நாடியதால் சமாதானப்படுத்திய லோகேஷ், தனக்கு சொந்தமான நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கூறி உள்ளார். சம்பவத்தன்று பணத்தை தருவதாக தனிமையான இடத்திற்கு மனைவி கவுரம்மாவை வரவழைத்து, தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளார் லோகேஷ்.
பின்னர் கவுரம்மாவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு, காரிமங்கலம் தீகுண்டு பகுதியில், சாக்குமூட்டையுடன் சடலத்திற்கு தீவைத்து எரித்துள்ளார் லோகேஷ். அதன்பின்னர் காரில் ஏறி தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளி அனுமந்தப்பா ஆகியோரை கைது செய்த காரிமங்கலம் போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.