"தங்கச்சிய பாக்கணும்னு அம்மா சொல்லிச்சு"... சகோதரியை அழைத்து வர பழுதான 'சைக்கிளில்'... 80 கிலோமீட்டர் 'பயணம்'... 'நெகிழ' வைத்த 'அண்ணன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை கூடல் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட தனது இரு பிள்ளைகளான ஜீவராஜ் மற்றும் பிரவீனா ஆகியோரை கூலி வேலை செய்து வளர்த்தி வந்தார். பிரவீனா தேனி மாவட்டத்திலுள்ள கண் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென தமிழ்செல்விக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. தேனியில் பணிபுரிந்து வரும் தனது மகளை காண வேண்டும் என மகன் ஜீவராஜிடம் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலிலுள்ளதால் தன்னிடம் பழுதான சைக்கிளை எடுத்து கொண்டு 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது தங்கையை அழைத்து வர ஜீவராஜ் கிளம்பியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் சைக்கிள் காற்று இறங்கிவிடும் என்பதால் சைக்கிளுடன் காற்றடிக்கும் பாம்பையும் எடுத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் சைக்கிளில் காற்றடித்து கொண்டே நேற்றிரவு தங்கை வேலை செய்யும் மருத்துவ வளாகத்தை அடைந்துள்ளார். பின்பு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் உறங்கிய ஜீவராஜ், இன்று காலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது தங்கையை அழைத்து செல்ல அனுமதி கேட்டுள்ளார். தொடக்கத்தில் மறுத்த நிர்வாகம் பின் ஜீவராஜ் நிலைமையை எடுத்துக் கூறியதும் அனுமதியளித்தது. பின்னர் அங்கிருந்து தனது தங்கையை அழைத்து சென்ற போது தேனி போலீசார் இருவரையும் விசாரித்துள்ளனர்.
அவர்களின் விவரத்தை கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார், தேனியிலுள்ள தொழிலாளர் ஒருவரின் உதவியுடன் கார் மூலம் அவர்கள் மதுரை சென்று சேர உதவி செய்தனர். தங்கையை அழைத்து வர பழுதடைந்த சைக்கிளில் தங்கையை அழைத்து வர சென்ற அண்ணனின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.