தனியார் துறையில் 75 சதவிகித வேலைவாய்ப்பை ஆந்திர மக்களுக்கே, வழங்க வகைசெய்யும் மசோதாவை, ஆந்திர மாநில அரசு கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவின் படி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ள பணிகளில் 75 சதவிகிதத்தை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். உள்ளூர் பணியாளர்களக்கு திறன் இல்லை எனக் கூறி, அதிகப்படியாக வெளி மாநில ஆட்களை பணிக்கு எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாறாக திறமையற்றவர்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம், திறன் பயிற்சிஇலவசமாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்து, ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு மூன்று மாதமும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் அக்டோபர் முதல் வாரத்தோடு ஆந்திரப் பிரதேசத்தில் 4 லட்சம் கிராமப்புற இளைஞர்கள் வேலையில் சேர்வார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அதிலும் 1.50 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை கிடைக்கும். மீதமுள்ளவர்களுக்கு அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில், இப்படி ஓர் மசோதாவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றி இருப்பது நாடுமுழுக்க கவனம் பெற்றுள்ளது.