'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில், மருத்துவ மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'!

கொச்சியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து வந்து கொண்டு இருந்தது. பேருந்தை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொழிஞ்சிப்பட்டி என்ற இடத்தில், இன்று அதிகாலை பேருந்து வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது அந்தப் பேருந்து சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் மீது மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த  மாணவி ஒருவர், வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு, எம்.டி. உயர் படிப்பு படித்து வந்தார். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று அலறித் துடித்தனர்.

விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணி உள்பட 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, MADURAI, DIED, INJURED