'திடீர்னு வெடிகுண்டு சத்தம் கேட்டுச்சு...' 'பசுமாட்டை பார்த்து கண்ணீர் சிந்திய விவசாயி...' நெஞ்சை உறைய செய்யும் சோக சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு நாட்டு வெடிகுண்டை கடித்து தாடை சிதைந்து உயிருக்கு போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'திடீர்னு வெடிகுண்டு சத்தம் கேட்டுச்சு...' 'பசுமாட்டை பார்த்து கண்ணீர் சிந்திய விவசாயி...' நெஞ்சை உறைய செய்யும் சோக சம்பவம்...!

குமாரசாமி என்னும் விவசாயி சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியில் வசித்து வருகிறார். ஆடு மாடுகளை வளர்த்து வரும் இவர் காலை நேரத்தில்  மேய்ச்சலுக்கு கூட்டி செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் தன் கால்நடைகளை அப்பகுதியில் உள்ள வனத்தை ஓட்டி அமைந்துள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

திடீரென ஏற்பட்ட வெடிகுண்டு சத்தத்தால் பதறி அடித்துக்கொண்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியுள்ளார் குமாரசாமி. அங்கு குமாரசாமி வளர்த்து வந்த பசுமாடு முகத்தின் தாடை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

உடனடியாக பசுமாட்டினை மருத்துவமனையில் அனுமதித்த அவர், வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த போலீசாரிடம் கண்ணீர் மல்க வெடிகுண்டு வெடித்த செய்தியை தெரிவித்துள்ளார்.

வனப்பகுதியில் நுழையும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக மேய்ச்சல் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை தன் பசு மாடு கடித்ததால் வெடித்து தாடை சிதைந்தது என கூறியுள்ளார்.

மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்த தனது பசுமாடு தற்போது தாடை சிதைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகிறது அதனால் தன் பசு மாட்டிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, சத்தியமங்கலம் வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.