‘ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கணும்’... ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அமைப்பை, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 29-ம் தேதி முதல் மே 24 வரை 13-வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ரசிகர்கள் அதிகம் கூடும் ஐபிஎல் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் தொற்று நோயை உருவாக்கியுள்ளது. உலகின் பழமையான போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் கால்பந்து தொடர், கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டு பதில் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக’ கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை நீதிபதிகள் எம்.எம். சுந்திரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பது குறித்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.