‘கோவத்துல குறுக்க இருந்த கதவ மறந்துட்டனே’.. வாக்குவாதம் செய்த அம்பயருக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் விராட் கோலியுடனான வாக்குவாதத்தில் பொறுமையை இழந்த நீஜல் லாங், பதிலுக்கு செய்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
முன்னதாக சென்னை மேட்ச் ஒன்றில் சென்னை அணி கேப்டன் தோனி, மைதானத்தில் இறங்கி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது விவாதப் பொருளாகவே மாறிப்போனது. அதுமட்டுமல்லாமல், தோனி மீதான விமர்சனங்களும், தோனிக்கான ஆதரவுகளும் ஒருசேரக் குவிந்தன.
ஆனாலும் ஐபிஎல் நிர்வாக முறைப்படி தோனிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், பெங்களூரு அணி கேப்டன் விரோட் கோலிக்கும் நடுவர் நீஜல் லாங்குக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது.
முன்னதாக ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தபோது , 20-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்து நோ பால் என்றும், அவர் பவுலிங்கின் போது லைனை தாண்டியதாகவும் ஃபீல்டு அம்பயர் நீஜல் லாங் அறிவித்ததால், கோலிக்கும் நீஜலுக்குமான வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முடிந்து, இடைவேளையின்போது நடுவர்களின் அறைக்குச் சென்ற நீஜல் லாங், அந்த அறையின் கதவை வேகமாக சாத்தியதால் கதவு சேதமாகியுள்ளது.
வாக்குவாதம் செய்த டென்ஷனில் பொறுமையின்றி நீஜல் அவ்வாறு செய்தாரா என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்க அலுவலர்களிடம் பேசிய நீஜல், கதவை சேதப்படுத்தியதற்கு ஈடாக 5 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். எனினும் இதுபற்றி பேசிய கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் சுதாகர் ராவோ, இதுபற்றி கிரிக்கெட் நிர்வாக அலுவலர்களுக்கு புகார்க்கடிதம் ஒன்றை எழுதவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.