‘தோனியின் ஓய்வு’... ‘பதிலளித்த விராட் கோலி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பைதொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று வதந்தி பரவிய நிலையில், ஓய்வு முடிவு குறித்து தோனி எங்களிடம் எதுவும் கூறவில்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

‘தோனியின் ஓய்வு’... ‘பதிலளித்த விராட் கோலி’!

உலகக் கோப்பை தொடர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது, தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து எதுவும் தெரிவித்தாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த விராட் கோலி, ‘இல்லை. அவர் இதுவரை எங்களிடம் எதுவும் கூறவில்லை. அவர் அடுத்து என்ன செய்ய உள்ளார் என்பது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை, மேலும் அவரை பற்றி கடந்த வாரங்களில்  கூறியது போல், அவர் அவரது ஆட்டத்தை ஆடுகிறார். அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல இறுதி வரை போராடுகிறார்’ என்றார்.

ஆனால், ரசிகர்கள் சிலர் தோனி ஓய்வு முடிவை அறிவித்ததுபோல், சமூக வலைதளங்களில் மீம்களை போட்டு வந்தனர். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி தனது முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும், நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட் ஆன புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ‘நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் கடைசி ஆட்டமே, தோனியின் இறுதி ஆட்டமாக இருக்கும்’ என்று தகவல்கள் வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்படி திடீரென ஓய்வை அறிவித்தாரோ, அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிவிக்கலாம் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.