'நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக'.. பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண விருந்தின்போது மாற்று சமூகத்தினருக்கு இணையாக நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்ட, பட்டியலின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வாலில் உள்ள பாசான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர தாஸ். தச்சராக வேலை செய்து வரும் இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஷிர்கோட் பகுதியில் உள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜிதேந்திர தாஸ் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற விருந்தில், நாற்காலியில் அமர்ந்து உணவு உண்டுள்ளார். இதனைக் கண்ட மாற்று சமூகத்தினர் ஜிதேந்திர சிங் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தாஸ் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 28-ம் தேதி ஞாயிறன்று உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தாஸின் உறவினரான மாமா கூறும்போது, 'தூரத்து உறவினர் ஒருவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் எல்லோரும் சென்றோம். நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் இருந்தபோது, தாஸ் மட்டும் சாப்படுவதற்காக பந்திக்கு சென்றார். அந்த நேரத்தில் தாஸ் தாக்கப்பட்டுள்ளார்' எனக் கூறினார். மேலும் கூறுகையில், `திருமணம் முடிந்த பின் மாற்று சமூகத்தினர் ஒருவரின் எதிரில், சேரில் அமர்ந்து இரவு விருந்தை உண்டுகொண்டிருந்தான்'.
'அதைக் கண்ட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோபமடைந்தவர்கள், உடனே அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டுத் தட்டை எட்டி உதைத்து, பின்னர் சேரையும் சேர்ந்து உதைத்துத் தள்ளினர். தனக்குக் கீழான ஒருவன், சேரில் அமர்ந்து உண்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதைத்த பின்பும், அவர்களது ஆத்திரம் தீரவில்லை. மண்டபத்திலிருந்து ஜிதேந்திரன் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது, அவனை தூரத்திச்சென்று சரமாரியாக அடித்துள்ளனர். வலியால் அவர் துடித்துள்ளார்' என்றுக் கூறினார்.
ஜிதேந்திரனின் சகோதரர் பிரீதம் தாஸ் கூறுகையில், 'என் சகோதரனை அவர்கள் தலை மற்றும் உடலின் எல்லா இடங்களிலும் தாக்கியுள்ளனர். அவன் வலி தாங்கமுடியாமல் துடிதுள்ளான். தாக்குதலில் நிலைகுழைந்தவன், கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்துள்ளான். ஆனால் உள்ளே செல்லவில்லை. குடும்பத்தினர் யாரிடமும் தெரிவிக்காமல், வீட்டுக்கு வெளியில் உள்ள வராண்டாவில் படுத்துக்கொண்டான். மறுநாள் காலை, அம்மா வந்து எழுப்பும்போதுதான் அவன் சுயநினைவற்றுக் கிடைப்பது தெரியவந்தது’ என்றார்.
இதையடுத்து, பாசான் கிராம மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தாஸின் சகோதரி அளித்த புகாரின் பேரில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுதான் இந்த சம்பவம் வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது.