'பெங்களூரு' சத்தத்துக்கு 'காரணம் என்ன?' 'விடை கிடைத்தது...' 'வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரை நேற்று உலுக்கிய அந்த பயங்கர சத்தம் எங்கே இருந்து வந்தது என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

'பெங்களூரு' சத்தத்துக்கு 'காரணம் என்ன?' 'விடை கிடைத்தது...' 'வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி...'

நேற்று பிற்பகல் 1 மணியளவில் பெங்களூரு நகரில் திடீரென வானில் இருந்து ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தம் இதற்கு முன்பாக கேட்டறியாததாக இருந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிழக்கு பெங்களூருவில் உள்ள கேஆர்புரம் பகுதியில் இந்த சத்தம் மிக அதிகமாக கேட்ட போதிலும், அதைவிட தொலைதூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்டு, பன்னேர்கட்டா ரோடு, பொம்மனஹள்ளி, மடிவாளா போன்ற பகுதிகளிலும் இந்த ஒலி மக்களால் அதிகமாக உணரப்பட்டது. தமிழகத்தின் ஓசூரிலும் இந்த சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள், நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். விமான போக்குவரத்தை கண்காணிக்கும் எச்ஏஎல் அமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் இன்று விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை என்றனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று வெடிப்பு இந்த ஒலிக்கு காரணம் என்று சில தட்பவெட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தை அம்பன் புயல் நெருங்கியபோது, காற்றில் வெற்றிடம் ஏற்பட்டதால், இவ்வாறு ஒரு சத்தம் வந்திருக்கலாம் என்று அவர்கள் கூறி இருந்தனர்.

இந்நிலையில், உறுதியான காரணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தம் தான் இது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் இது போல சோதனை விமானங்களை இயக்கி பார்ப்பது வழக்கம். சூப்பர் சோனிக் எனப்படும், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது சப்சோனிக் வேகத்துக்கு, விமான இயக்கத்தை குறைக்கும்போது இது போன்ற சத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறப்பது வழக்கம். நகரை விட்டு வெளியே தான் விமானம் பறந்தது. இருப்பினும் இதுபோன்ற விமானங்களில் இருந்து எழக்கூடிய ஒலி 65 முதல் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கும் கேட்கக் கூடியதுதான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.