'ஒரு பக்கம் எச்சில் துப்புறாங்க'... 'மறுபக்கம் ஐயோ'...'நாங்க அனுபவிச்ச வேதனை'... கதறிய செவிலியர்களின் மறுபக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய செவிலியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் பனியின் போது தாங்கள் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்கள்.
மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்தனர். மணிப்பூரைச் சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நாளில் தங்களது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் ஒடிசாவைச் சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மருத்துவ பணியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவரான கிறிஸ்டெல்லா என்பவர் கூறும்போது, ''நாங்கள் மகிழ்ச்சியாக இந்த பணியை விடவில்லை. பணியிலிருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் ஆளானோம்.
பணியிலிருந்த போது சிலர் எங்கள் மீது எச்சில் துப்பினார்கள். நாங்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்டார்கள். மேலும் எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தது என வேதனையுடன் கூறியுள்ளார்''. ஏற்கனவே கொரோனா கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை எதிர்த்து நின்று போராடும் செவிலியர்கள் சந்தித்துள்ள துயரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.