'அலறல்' சத்தம் கேட்டது.. எரிந்த நிலையில் 'இளம்பெண்' சடலம்.. மேற்கு வங்கத்தை 'அதிரவைத்த' கொலையாளிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள மாந்தோப்பில் நேற்று இளம்பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், '' 2 நாட்களுக்கு முன் மாந்தோப்பில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. ஆனால் நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது யாரையும் அங்கு காணவில்லை. இந்த இடத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் நாங்கள் போலீஸ் செக்போஸ்ட் ஒன்று அமைக்க சொல்லி நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்,'' என்றனர்.
இந்த சம்பவம் குறித்து மால்டா எஸ்.பி அசோக் ரஜாரி கூறுகையில், '' அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தன. அவரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரேத பரிசோதனைக்காக அவரை மால்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளோம். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? எனபது குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
இதுகுறித்து மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ''பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என போலீஸாருக்குத் தெரிவித்துள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.