"உனக்கு கொரோனா வர..." நீதிபதியை பார்த்து சாபமிட்ட வழக்கறிஞர்... அதிர்ந்து போன நீதிபதியின் அதிரடி உத்தரவு...
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவால் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதியை நோக்கி " உனக்கு கொரோனா வைரஸ் வர” என சாபமிட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிஜாய் அதிகாரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது கட்சிக்காரர் மீது வங்கி நிர்வாகம் அளித்துள்ள ஜப்தி நடவடிக்கையை நிறுத்தக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
அவரது கட்சிக்காரர் தனியார் போக்குவரத்தின் கீழ் பேருந்து வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பி செலுத்தாத நிலையில், வங்கி நிர்வாகம் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த ஜப்தி நடவடிக்கையை நிறுத்தக் கோரி பிஜாய் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். நீதிபதி திப்னாகர் தத்தா முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, "கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது" என நீதிபதி கூறினார். "அவசர வழக்கு என்றால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம், ஆனால் இது அப்படியல்ல" என கூறி விசாரிக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் பிஜாய், வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி திப்னாகர் தத்தாவை நோக்கி, ''உனக்கு கொரோனா வர” என உரக்க சத்தமிட்டவாறு சாபமிட்டார்.
இதையடுத்து, நீதிமன்ற கண்ணியத்தை மீறி நீதிபதியை அவதூறாக பேசியதற்காக வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டார்.