1. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று ராமேஸ்வரத்திலுள்ள அவரது நினைவிடத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2. சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒரு புள்ளியில் முதலிடத்தை தவறவிட்டுள்ளார் விராட் கோலி. முதல் 3 இடங்களில் ஸ்டீவ் ஸ்மித் (937 புள்ளிகள்), விராட் கோலி (936), கனே வில்லியம்சன் (878) ஆகியோர் உள்ளனர்.
3. வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
4. உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டையானால் ஒரு அணி வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
5. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கி இதுவரை 51000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
6. சேலத்தில் தாய், தந்தையை மதுபோதையில் தவறாகப் பேசிய பெரியப்பாவை 15 வயது சிறுவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7. பாஜகவின் புதிய தலைவர் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படுவார் என தற்போதைய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8. லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளையடிப்பதற்காக செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை இரவு நேரங்களில் சுவரை துளையிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
9. சேலம் - கரூர், கோயம்புத்தூர் - பொள்ளாச்சி, கோயம்புத்தூர் - பழனி இடையே 3 புதிய ரயில் சேவைகளை இன்று ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
10. சென்னையை அடுத்த மாதவரத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் ரமேஷ் என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
11. இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
12. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
13. இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது. தற்போதைய புள்ளி விவரங்களின்படி பார்த்தால் அது மீண்டு எழும் என உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
14. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.