தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு பாஜகவில் இணைவார் என, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும், அதன் மூலம் தோனி வெற்றி கோப்பையோடு தனது ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அனைத்து விஷயங்களும் நடந்தன. இதனிடையே தோனியின் ஓய்வு பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், தற்போது அவரை சுற்றி அரசியல் கருத்துகளும் எழ தொடங்கியுள்ளன.
இதனிடையே, ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணையப்போகிறார் என, முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ''தோனி உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர். அவர் பாஜகவில் இணைவது குறித்து நீண்ட நாட்களாகவே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தோனி சந்தித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் பாஜகவில் தோனி இணைவது குறித்து அவரது ஓய்வுக்குப் பின்னரே தெரியவரும் என கூறியுள்ளார். இதனிடையே இந்த வருட இறுதியில் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோனி பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.