‘அதே நாளிலா மோடி Man vs Wild ஷூட்டிங்கில் இருந்தார்.?’ புதிதாக வெடித்துள்ள சர்ச்சை..
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதமர் மோடி பங்கேற்றுள்ள Man vs Wild நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற நிகழ்ச்சி MAN vs WILD. வன விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி பியர் கிரில்ஸ் உடன் இந்திய காடுகளில் பயணம் செய்துள்ளார். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ட்ரைலர் நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்ட நாள் குறித்து புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. புல்வாமா தாக்குதல் நடைபெற்ற நாளான பிப்ரவரி 14ஆம் தேதி தான் பிரதமர் மோடி டிஸ்கவரி சேனலின் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கிலும் இருந்துள்ளார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மோடியை விமர்சித்து வருகின்றனர். புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 43 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்த அதே நாளில் தான் மோடியின் ஷூட்டிங்கும் நடந்தது என அரசு அதிகாரி ஒருவரும் பிரபல ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமரின் ஷூட்டிங் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்தது என்பதை மறுக்க முடியாது. புல்வாமா தாக்குதல் நடந்த அன்று உத்தரகாண்ட்டின் கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 3 மணிக்குத் தொடங்கிய டிஸ்கவரி ஷூட்டிங் 45 நிமிடங்கள் நடந்தது.
பின்னர் ருத்ரபூரில் நடைபெற இருந்த பேரிடர் மீட்பு மையத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது பாதி வழியில் சென்று கொண்டிருக்கும்போது சுமார் 4 மணியளவில் தான் அவருக்கு தாக்குதல் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாகவே ஏன் இதைத் தெரிவிக்கவில்லை என அதிகாரிகளிடம் கோபப்பட்ட பிரதமர் ருத்ரபூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் உடனடியாக டெல்லி திரும்பினார்” எனக் கூறியுள்ளார்.